கோடி அற்புதர் பதுவை பதியராம் புனித அந்தோணியார் நவநாள் ஜெபம்


பதுவை பதியராம் அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும், 



புனித அந்தோணியாரை நோக்கி வேண்டுதல் ஜெபம்

எல்: இப்புண்ணிய ஷேத்திரத்தில் மாட்சிமை தங்கிய மேலான சிம்மாசனத்தில் கிருபாசனங்கொண்டு எழுந்தருளியிருக்கிற புனித அந்தோணியாரே ! பரிசுத்தத்தனம் விளங்கும் லீலியே ! விலைமதிக்கப்படாத மாணிக்கமே ! பரலோக பூலோக காவலரே ! கஸ்தி துன்பப்படுகிறவர்களுக்குப் பரம சஞ்சீவியானவரே ! பாவிகளின் தஞ்சமே ! உமது இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம். உமது திருமுக மண்டலத்தை அண்ணாந்து பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம். மகா சிரவணம் பொருந்திய புனித அந்தோனியாரே ! சூரத்தனமுள்ள மேய்ப்பரே ! பசாசுகளை மிரட்டி ஓட்டுபவரே ! திருச்சபையின் கருணையின் கண்ணாடியானவரே ! இவ்வுலகில்  எங்கள் ஆதரவும் நீரல்லவோ ! எங்கள் தஞ்சமும் நீரல்லவோ ! எங்கள் சந்தோஷமும், நம்பிக்கையும், பாக்கியமும் நீரல்லவோ ! நீர் எங்கள் ஞானத்தந்தை என்பதை எங்களுக்குக் காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களை தாய் தந்தையர்கள் பாராட்டுவார்களோ, உம்மைத் தேடிவந்த நிர்பாக்கியர்பேரில் தயவாயிரும். அழுகிறவர்களை அரவணையும்; அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுதலாக வாரும். நீர் இரங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இரங்குவார்? நீர் ஆதரியாவிட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்? நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்? நீர் உதவாவிட்டால் எங்களுக்கு வேறு யார் உதவுவார்? தஞ்சமென்று ஓடிவந்த அடியோர்கள் பெயரில் தயவாயிரும். பரிசுத்த வெண்மையின் தூயதான தயாபரமே ! தயைக்கடலே ! தவிப்பவர்களுக்குத் தடாகமே ! தனித்தவருக்குத் தஞ்சமே ! உமது இன்பமான சன்னிதானம் தேடிவந்தோம். ஆறு, காடு, கடல்களைக் கடந்து ஓடிவந்தோம். துன்பம், பிணி, வருமை முதலிய கேடுகளினாலே வாடி நொந்தோம். எங்கள் நம்பிக்கை வீண்போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ? எங்கள் யாத்திரைகள் பயன் அற்றதாய்ப் போகுமோ? எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இதயத்தை  உருக்காது போகுமோ? அப்படி ஆகுமோ ஐயா, எங்களின் அன்பான தகப்பனே! எங்களையும் எங்கள் குடும்பம் முழுவதையும்  உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். எங்களைக் கையேற்றுக்கொண்டு ஆசீர்வதித்தருளும் -ஆமென்.

ஜெபிப்போமாக :


சர்வேசுரா சுவாமி ! புனித அந்தோணியாரை வணங்கி அவருடைய சலுகையை இரந்து, சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கிற யாத்திரிகர்களாகிய அடியோர்கள் பேரில் தயை செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் ஆமென்.

புனித அந்தோணியார் பிராத்தனை:


சுவாமி கிருபையாயிரும்

கிறிஸ்துவே கிருபையாயிரும்

சுவாமி கிருபையாயிரும்

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா - எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா - 
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.


பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா - எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

தூய தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா - எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

கன்னியருக்குள்  உத்தம  கன்னிகையே  - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்


ஜென்ம பாவமில்லாமல் உற்பவித்த புனித மரியாயே  - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

பக்தி சுவாலகருக்கு ஒத்தவராகிய புனித பிரான்சிஸ்குவே - எங்களுக்காக

பதுவைப் பதியரான புனித அந்தோணியாரே - எங்களுக்காக

பரமண்டல திருவின் திருப்பெட்டியான புனித அந்தோணியாரே - எங்க....

மூப்பின் கீழமைச்சலுக்குக் கண்ணாடியான புனித அந்தோணியாரே 

தர்மத்தை  மிகவும் பின் தொடர்ந்தவரான புனித அந்தோணியாரே 

தர்ம நெறியில் மாறாத மனதை அபேட்சித்தவரான புனித அந்தோணியாரே 

தூய்மையில் லீலிமலரான புனித அந்தோணியாரே 

சர்வேசுரனுடைய திருவசனத்தின் தொனிச்சத்தமான புனித அந்தோணியாரே 

இஸ்பானிய நாட்டுக்கு நவ  நட்சத்திரமான புனித அந்தோணியாரே 

சுவிசேஷத்தை ஊக்கத்துடனே பிரசங்கித்து நடத்தினவரான புனித அந்தோணியாரே 

இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரனுடைய படிப்பினைகளை விரும்பினவரான புனித அந்தோணியாரே 

அவிசுவாசிகளுக்கு பயங்கரமாக உபதேசித்தவரான புனித அந்தோணியாரே 

புண்ணியவான்களுக்குக் குறையற்ற படிப்பினையாகிய புனித அந்தோணியாரே 

மீனோரென்கிற  சந்நாசிகளுக்குப் படிப்பினையாகிய புனித அந்தோணியாரே 

அப்போஸ்தலருடைய கொழுந்தான புனித அந்தோணியாரே 

பாவிகளுக்கு வெளிச்சம் கொடுக்கிரவரான புனித அந்தோணியாரே 

வழிதப்பிப் போகிறவர்களுக்குத் துணையான புனித அந்தோணியாரே 

ஆச்சரியங்களைச் செய்கிறவரான புனித அந்தோணியாரே 

குற்றமில்லாத ஜனங்களுக்கு ஆறுதலும் பாதுகாவலுமான புனித அந்தோணியாரே 

உவமைகளை போதிக்கிற உபதேசியாரான புனித அந்தோணியாரே 

பிசாசுகளை மிரட்டி ஓட்டுகிறவரான புனித அந்தோணியாரே 

அடிமைப்பட்டவர்களை மீட்கிறவரான புனித அந்தோணியாரே 

வியாதிக்காரர்களை குணமாக்குகிறவரான புனித அந்தோணியாரே 

மரணமடைந்தவர்களை சர்வேசுரனுடைய உதவியினாலே உயிர்பித்தவரான புனித அந்தோணியாரே 

பிறவிக் குருடனுக்கு கண் கொடுத்தவரான புனித அந்தோணியாரே 

காணமற்போனவைகளைக் காட்டிக் கொடுக்கிறவரான புனித அந்தோணியாரே 

இழந்துபோன பொருட்களை  கண்டெடுக்கச் செய்கிறவரான புனித அந்தோணியாரே 

வழக்காளிகளுடைய உண்மையைப் பாதுகாக்கறவரான புனித அந்தோணியாரே 

பரமண்டலத்திற்குச் சுதந்திரவாளியான புனித அந்தோணியாரே 

தரித்திரருக்கு இரத்தினமான புனித அந்தோணியாரே 

சமுத்திரத்தின் மச்சங்களுக்கு உபதேசித்தவரான புனித அந்தோணியாரே 

அப்போஸ்தலருடைய குறையற்ற சுத்திகரத்தை நேசித்தவரான புனித அந்தோணியாரே 

புண்ணிய மென்கிற ஞானவெள்ளான்மையை பல நாடுகளில் விளைவித்தவரான புனித அந்தோணியாரே 

உலகம் என்கிற அபத்தத்தை புறக்கணித்தவரான புனித அந்தோணியாரே 

சமுத்திரத்தில் உபத்திரப்படுகிறவர்களை இரட்சித்தவரான புனித அந்தோணியாரே 

சிற்றின்ப ஆசையை ஜெயித்தவரான புனித அந்தோணியாரே 

எண்ணிறந்த ஆத்துமாக்களை பரலோகத்தில் சேர்பித்தவரான புனித அந்தோணியாரே 

நஞ்சிருக்கக்கண்டும் போசனம் அருந்தினவரான புனித அந்தோணியாரே 

நன்நாக்கழியாத நற்தவத்தினரான புனித அந்தோணியாரே 

புதுமைகளினால் பிரபல்யியமான புனித அந்தோணியாரே 

திருச்சபையின் தெளிவான தீபமான புனித அந்தோணியாரே 

ஐம்புலன் வென்றோர்களுடைய சபைக்கு அரணான புனித அந்தோணியாரே 

சிறு குழந்தை சுரூபத்தைக் கொண்டிருந்த இயேசுவை கையில் ஏந்தின புனித அந்தோணியாரே 

உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே

எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே

எங்கள் மன்றாட்டை தயவாய் கேட்டருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே

எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

புனித அந்தோனியாரே! சூரத்தனமுள்ள மேய்பரே, கஷ்டப்டுகிறவர்களுக்குச் சந்தோஷம் வருவிக்கிறவருமாய் பாவ அக்கினியுடைய சாந்தியை சீக்கிரத்திலே அமர்த்துகிறவரும் உன்னதப் பரம மண்டலங்களில் இருக்கிறவருமான பிதாவானவர். இம்மையினுடைய அவதிக்கு பிற்பாடு எளியவர்களாயிருக்கிற எங்களுக்கு மோட்ச விருந்து தந்தருளவேண்டுகிறோம்.

இயேசு கிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக,

பதுவைப் பதியரான புனித அந்தோனியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.



ஜெபிப்போமாக :

சர்வேசுரா சுவாமி ! உமது ஸ்துதியரும் முத்தப்பேறு பெற்றவருமான தூய அந்தோனியாரை ஸ்துதிக்கிற உமது புனித பத்தினியான திருச்சபையின் பிள்ளைகளெல்லோரும் அவருடைய மன்றாட்டினால் சகல அவசரங்களிலும் உமது உபகார சகாயங்களை அடையும்படியாகவும், நித்திய பேரின்பத்திற்கு பாத்திரமாயிருக்கத் தக்கதாகவும் கிருபை கூர்ந்தருளும். -ஆமென்.

அனுகூலமடைய செபம்:

ஓ ! பரிசுத்தத்தின் வெண்மையான லீலி புஷ்பமே ! உன்னதத் தரித்திரத்தின் முன் மாதிரிகையே ! மெய்யான தாழ்ச்சியின் கண்ணாடியே! பரிசுத்தத்தின் ஒளிவிடும் நட்சத்திரமே! ஓ ! மகிமையிலங்கும் புனித அந்தோனியாரே ! உமது திருக்கரங்களில் பாலனாக இயேசு எழுந்தருளி வாரும். விஷேசித்த சுதந்திரம் பெற்று அகமகிழ்தீரல்லோ ! அதுபோல் வல்லமையுள் ள உம்முடைய ஆதரவில் என்னையும் வைத்து காப்பாற்ற வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். ஆண்டவரால் நீர் பெற்றுக்கொண்ட வரங்களில் புதுமை செய்யும் வரமே உம்மிடத்தில் முக்கியமாய் பிரகாசிக்கிறதல்லவோ ! தேவரீர் என்பேரில் இரங்கி எனக்கு அவசியமான இந்த காரியத்தில் உதவி செய்ய வாரும்.....

(தேவையானதை உறுதியோடு கேட்கவும்)

அக்கிரமமான ஆசைப்பற்றுதலையெல்லாம் என் இருதயத்தினின்று நீக்கி அதை சுத்திகரித்தருளும். என் பாவங்களுக்காக நான் மெய்யான மனஸ்தாபப்படவும், ஆண்டவரையும் புறத்தியாரையும் உருக்கமாய் நேசித்து வரவும் எனக்கு வேண்டிய வரத்தை அளித்தருளும். இவ்விதமாய் நான் இம்மையில் ஆண்டவரைப் பிரமாணிக்கமாய் சேவித்து, மறுமையில் உம்மோடு அவரை நித்தியமாய்த தரிசித்துப் போற்றிப் புகழ்ந்து வாழ்த்தக்கடவேனாக. -ஆமென்.

பேய் ஓட்டுகிறதற்கு செபம்:

இதோ ஆண்டவருடைய சிலுவை; சத்துராதிகளாகிய நீங்கள் அகன்று போகக்கடவீர்கள்.

அல்லேலூயா ! அல்லேலூயா ! அல்லேலூயா ! யூதா கோத்திரத்தின் சிங்கமும் தாவீதின் சந்ததியுமானவர் ஜெயங்கொண்டார். அல்லேலூயா!

நரக வல்லமையை அடக்கின புனித அந்தோனியாரே ! இயேசு கிறிஸ்துநாதருக்கும் சத்திய வேதத்திற்கும் சத்துராதிகளாய் இருக்கிறவர்கள் எல்லோரையும் சிதறடிப்பதுமல்லாமல் துன்மார்க்கங்களையும் துர்க்குணங்களையும் நிர்மூலமாக்கும்படி உம்மை மன்றாடுகிறோம். - ஆமென்.





            Posted By ;

           StalinJenifer 
                                                                                                                            
                                                                                                                                                                                                                                                                              





Comments

Post a Comment